செய்திகள்

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு இன்று காவிரி நீர் வந்தது

Published On 2018-07-27 06:45 GMT   |   Update On 2018-07-27 06:45 GMT
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று காலை வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். #Kallanai #VeeranamLake
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது.

பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் குறைந்தது.

இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.



தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து பாலைவனமாக காணப்பட்டது. கடந்த 5 மாதமாக வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். வீராணம் ஏரிக்கு காவிரி நீர் எப்போது வரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி காவிரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு கடந்த 22-ந் தேதி வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.

கீழணையின் மொத்தம் நீர்மட்டமான 9 அடியை எட்டியது. பின்னர் அங்கிருந்து வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இன்று காலை காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஏரிக்கு காவிரி தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரித்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீராணம் ஏரி நிரம்பியவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேரும். கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது.

எனவே இதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Kallanai  #VeeranamLake

Tags:    

Similar News