தமிழ்நாடு
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் உயர் மின்னழுத்த கம்பி சிக்கி விபத்து

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் உயர் மின்னழுத்த கம்பி சிக்கி விபத்து

Published On 2022-01-08 06:17 GMT   |   Update On 2022-01-08 06:17 GMT
அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கிய உயர் மின்னழுத்த கம்பியில் ஒருவேளை மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
விருதுநகர்:

தமிழகத்தில் ரெயில் சேவையை மேம்படுத்தும் வகையில் பெரும்பாலான வழித்தடங்கள் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி விருதுநகர்-மானாமதுரை இடையே அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்த வழித்தடத்தில் தற்போது உயர் மின்னழுத்த கம்பிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளுக்கிடையே இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

அதன்படி சென்னையிலிருந்து காரைக்குடி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

நேற்றிரவு 8.25 மணியளவில் சென்னையில் இருந்து கிளம்பிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது தொட்டியங்குளம் ரெயில் தண்டவாளத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் சரியாக பொருத்தப்படாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் என்ஜினில் உயர் மின்னழுத்த கம்பிகள் சிக்கி பின்னிக் கொண்டது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அவர் கீழே இறங்கி பார்த்தபோது உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து என்ஜினில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே பணியாளர்கள் என்ஜினில் சிக்கியிருந்த மின்கம்பிகளை அகற்றினர்.

இதனையடுத்து சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.சுமார் 3 மணி நேரம் ரெயில் நடுவழியில் காட்டுப்பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில பயணிகள் ஆட்டோ உதவியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் மின்னழுத்த கம்பியில் ஒருவேளை மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்த விபத்து காரணமாக விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலும், அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News