தமிழ்நாடு

ஜாபர்சாதிக் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.21 கோடி பணம் முடக்கம்

Published On 2024-04-14 06:00 GMT   |   Update On 2024-04-14 06:00 GMT
  • ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

சென்னை:

டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News