தமிழ்நாடு

அரும்பாக்கத்தில் சிறுமியை முட்டி தூக்கிய சம்பவம்: ஒரே நாளில் 25 மாடுகள் பிடிபட்டன

Published On 2023-08-11 06:47 GMT   |   Update On 2023-08-11 06:47 GMT
  • அரும்பாக்கத்தில் சிறுமியை முட்டி தூக்கிய மாடுகளின் உரிமையாளரான விக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • மாடுகளுக்கு மட்டும் அபராதமாக 5 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை சூளைமேடு காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர் சித்திக் அலி. இவரது மனைவி அர்சின் பானு. இவர்களுக்கு 9 வயதில் ஆயிஷா என்ற மகளும் 5 வயதில் மகனும் உள்ளனர்.

இருவரும் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். ஆயிஷா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலையில் அர்சின் பானு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

4-ம் வகுப்பு மாணவியான ஆயிஷா தாயின் முன்னால் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சென்று கொண்டிருந்த 2 மாடுகளில் ஒன்று திடீரென திரும்பி முட்டி தூக்கியது. இதனால் பயந்துபோன சிறுமி கூச்சல் போட்டார். ஆனால் மாடு விடாமல் முட்டித் தள்ளிக்கொண்டே இருந்தது.

தரையில் போட்டு புரட்டி எடுத்தது. இதனைப் பார்த்த தாயும், தம்பியும் அதிர்ச்சியில் உறைந்து போய் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் மாட்டை கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டினர்.

இருப்பினும் மாடு சிறுமியை துவம்சம் செய்ததை நிறுத்தவில்லை. கடும் போராட்டத்துக்கு பிறகே சிறுமியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டிடம் இருந்து மீட்டனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் சிறுமியின் முகம், கை, கால்களில் சிராய்ப்பு, காயங்கள் ஏற்பட்டன. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாடு முட்டிய சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அனைவரும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

காயம் அடைந்த சிறுமியை அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அரும்பாக்கம் சம்பவத்துக்கு பிறகு மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை உடனடியாக பிடிப்பதற்கு உத்தரவிட்டு 25 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மாநகராட்சி பகுதியில் மாடுகளை வளர்ப்பவர்கள் வீடுகளில் கட்டி வைத்தே அதனை வளர்க்க வேண்டும். தெருக்களில் சுற்றித் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இப்படி பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இனி மாடுகளை தெருக்களில் சுற்றித் திரிய விடமாட்டோம் என்று பாண்டு பத்திரம் எழுதி வாங்கிய பிறகே திருப்பி கொடுக்கிறோம். அதே நேரத்தில் அவர்களிடம் ஒப்படைக்கும் வரையில் மாநகராட்சி பராமரிக்கும்.

ஒவ்வொரு நாளுக்கும் தினமும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டு மாடுகளை அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் மீண்டும் தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விட்டால் அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாடுகளை வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அங்கு மாடு வளர்க்க இடம் இல்லை என்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மாடுகளை கோ சாலையில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து தனியாக அடைத்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து அபராதமும் விதித்து உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு 1,259 மாடுகளும், 2022-ம் ஆண்டு 7,278 மாடுகளும் பிடிபட்டிருந்தன. இந்த ஆண்டு இதுவரையில் 2,809 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாடுகளுக்கு மட்டும் அபராதமாக 5 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அரும்பாக்கத்தில் சிறுமியை முட்டி தூக்கிய மாடுகளின் உரிமையாளரான விக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 289 ஐ.பி.சி. (அச்சுறுத்தும் வகையில் மாடுகளை ரோட்டில் சுற்ற விடுதல், 337 ஐ.பி.சி. (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சட்டப் பிரிவுகள் ஜாமீனில் செல்லக்கூடிய பிரிவுகள் என்பதால் அவர் கைதாகி விடுதலையாகி உள்ளார்.

ஆனால் அரும்பாக்கம் சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News