தமிழ்நாடு

தென்சென்னை, வடசென்னை தொகுதி ஓட்டுப்பதிவுக்கு 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்

Published On 2024-03-31 07:27 GMT   |   Update On 2024-03-31 07:27 GMT
  • வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
  • நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர் பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா (யாருக்கும் ஓட்டு இல்லை) பட்டன் இடம் பெறுகிறது. 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சூழ்நிலையில் அதற்கேற்ப கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்கப்படும்.

அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.

மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் கரூரில் 4 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

குறைந்த வேட்பாளர்களை கொண்ட நாகையில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். மீதமுள்ள பட்டன்கள் செயல்படாமல் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் போது கடைசி பட்டனாக நோட்டா இருக்கும்.

வாக்குப்பதிவு எந்திரத் தில் ஒட்டப்பட உள்ள வேட்பாளர்கள் பட்டியல், தபால் ஓட்டுகள் ஆகியவற்றை அச்சிடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 58 பேர் உள்ளதால் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறுவதற்கான முயற்சியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News