தமிழ்நாடு (Tamil Nadu)

தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2024-03-29 04:18 GMT   |   Update On 2024-03-29 04:18 GMT
  • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
  • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி வீரன் (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து அவர் கூறி கதறி அழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷ மருந்தை குடித்தனர்.

இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News