கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
- ஜின்னா பாலம் அருகே இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி- சேலைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜின்னா பாலம் அருகே வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவச வேட்டி-சேலை வாங்குவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படட்து. இதில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.