தமிழ்நாடு (Tamil Nadu)

விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-09-27 05:28 GMT   |   Update On 2024-09-27 06:02 GMT
  • ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன.
  • ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

சென்னை:

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. நாளையில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 7-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டதால் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது.

வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

வந்தே பாரத், தேஜாஸ் அதிவிரைவு ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. அரசு பஸ்களில் முன்பதிவு செய்து காத்து இருக்கின்றனர். தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் இடமில்லை. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை (சனிக்கிழமை) 415 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடரலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டப் பகுதிகள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் நிரம்பி விட்டன.

சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களும் நேற்றிரவு நிரம்பி விட்டன.

இதனால் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து சொந் ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று மாலையில் இருந்து பயணத்தை தொடங்குகின்றனர்.

இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடங்களை பிடிக்க பயணிகள் முண்டியடித்த னர்.

3 மணி நேரத்திற்கு முன்னதாக வந்து வரிசையில் நின்றனர். பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

Tags:    

Similar News