தமிழ்நாடு

3 நாளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை- கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

Published On 2023-11-13 09:09 GMT   |   Update On 2023-11-13 09:09 GMT
  • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு.
  • வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் நிர்வாகம் வசூலை குவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு. விடுமுறை காலங்களில் ரூ.175 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மது பானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மது அருந்துபவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக மது குடித்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக மது குடிப்பவர்கள் என பல காரணங்களால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களாக விற்பனைகளை கட்டியது. இதில் ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது. மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர்.

இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

Tags:    

Similar News