தமிழ்நாடு

திருப்பூரில் 8 செ.மீ. மழைப்பதிவு- அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-10-21 09:58 GMT   |   Update On 2024-10-21 09:58 GMT
  • திருப்பூரில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
  • கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

இந்தநிலையில் சோளிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் தனது தாயார், மனைவி மற்றும் மகளுடன் அனுப்பர்பாளையம்புதூர்-15 வேலம்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரில் அவருடைய கார் சிக்கிக்கொண்டது. இதனால் காருக்குள் இருந்த செந்தில்குமார் உள்பட 4 பேரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் சுப்பையா தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் இருந்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மழைநீரில் தத்தளித்து கொண்டிருந்த காரையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக அமராவதி அணைக்கு வினாடிக்கு 748 கன அடி நீர் வரத்து உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை 85 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் எந்நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்துள்ள மகாலட்சுமி நகர், கவிதா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்ததாகவும் ஒவ்வொரு முறை மழை பொழிவின்போதும் வீடுகளில் மழை நீர் சூழ்வதால் கடும் அவதி ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று காலை திருப்பூர்-அங்கேரி பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுவதால் உடனடியாக சாக்கடை கால்வாய் உயர்த்தி கட்டப்படும் என அறிவித்து அதற்கான பணிகள் துவங்கும் என அறிவித்தனர். எனினும் இது நிரந்தர தீர்வு இல்லை எனவும் தங்களுக்கு முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

திருப்பூர் வடக்கு - 72, குமார்நகர்- 84, திருப்பூர் தெற்கு - 9, கலெக்டர் அலுவலகம் - 92, அவிநாசி- 15, ஊத்துக்குளி-42, பல்லடம் 16, தாராபுரம் -11, மூலனூர்- 42, குண்டடம்- 33, உப்பாறு அணை - 8, காங்கயம்- 22, உடுமலை- 118, அமராவதி அணை- 54, திருமூர்த்தி அணை - 105, மடத்துக்குளம்-20 . மாவட்டம் முழுவதும் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News