15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமல்: 45 நாட்கள் நடைமுறையில் இருக்கும்
- எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
- மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தடை மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ளன. நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். ஆழ்கடலுக்குள் மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.