தமிழ்நாடு

பெண்ணாடத்தில் இருந்து புதுவை சென்ற லாரி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது- சிமெண்ட் மூட்டைகளும் சேதம்

Published On 2023-10-03 03:56 GMT   |   Update On 2023-10-03 03:56 GMT
  • சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

இதனை டிரைவர் பிரபாகரன் ஓட்டிச் சென்றார். இந்த லாரி ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டு பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின் பகுதியில் திடீரென்று தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மளமளவென தீப்பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. டிரைவர் பிரபாகரன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சாலையில் நடுவே லாரியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கி தப்பி ஓடினார்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் டீசல் டேங்க் அருகே தீ பற்றி பெரிய அளவில் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதில் லாரி முழுவதும் எரிந்து தீக்கரையானது. மேலும் லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது.

சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், நடு ரோட்டில் லாரி எரிந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரி திடீரென்று எப்படி எரிந்தது? காரணம் என்ன? என ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News