சிறுத்தையை பிடிக்க முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற சிறப்புக் குழு
- மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
- இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.