தமிழ்நாடு

பட்டாபிராமில் 82 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெருநாய்

Published On 2023-10-31 06:38 GMT   |   Update On 2023-10-31 06:38 GMT
  • நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருநின்றவூர்:

பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News