தமிழ்நாடு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது- பெருநகர வளர்ச்சி குழுமம்

Published On 2023-07-08 07:06 GMT   |   Update On 2023-07-08 07:06 GMT
  • விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது.
  • கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை:

தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விளையாட்டு துறைக்கு அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அதன்படி விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுகள் நடத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அரசின் சின்ன சின்ன திட்டங்களை கண்காணிக்க நடந்த ஆய்வின் போது, உலகத்தர விளையாட்டு நகர திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விளையாட்டு நகரம் அமைக்கக் கூடிய 3 இடங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது' என்று கூறி இருந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் அமைய உள்ள உலகத்தர விளையாட்டு நகரத்தில் ஒரு பெரிய ஸ்டேடியம், கால்பந்து மைதானம், தடகள விளையாட்டு பகுதி, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் இடம் இதில் இடம் பெற்றிருக்கும். விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் மற்றும் குத்தம்பாக்கம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பஸ் நிலையங்களை அமைத்து வருகிறது. 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News