தமிழ்நாடு

சத்யபிரதா சாகு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் 2.45 கோடி வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு

Published On 2022-09-17 03:06 GMT   |   Update On 2022-09-17 03:06 GMT
  • தமிழகத்தில் தற்போதுவரை 40 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர்.
  • அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 61.5 சதவீதம் பேர் இணைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஆதார் இணைப்பு 60 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. தமிழகத்திலும் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதார் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இணைப்புக்காக 6-பி என்ற விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆதார் விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று 'கருடா' செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.

என்.வி.எஸ்.பி. இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் பொதுமக்கள் தாங்களே இந்த இணைப்பை ஏற்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போதுவரை 40 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் தற்போதுவரை 2.45 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 61.5 சதவீதம் பேர் இணைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஆதார் இணைப்பு 60 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் 100 சதவீதம் பணியை முடித்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஆதார் எண் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த இணைப்பு ஏன் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்தால், வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பெயர் பதிவுகளை நீக்குதல், இடம் மாறும்போது எளிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்குவது மற்றும் சேர்த்துக்கொள்வது, எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவது போன்றவற்றுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று கூறும்படி அலுவலர்களை அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News