தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றாததால் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க.

Published On 2022-10-17 06:26 GMT   |   Update On 2022-10-17 07:11 GMT
  • அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர்.
  • சட்டசபை கூட்டம் தொடங்கியபோது எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.40 மணியில் இருந்து சட்டசபைக்கு வரத் தொடங்கினார்கள்.

9.57 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்தார். அவர் வரும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் 9.58 மணிக்கு உள்ளே வந்தார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

இதேபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க., காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அமர்ந்திருந்தனர்.

ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரவில்லை. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் சபைக்கு வரவில்லை.

காலை சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார். திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சிகளை தொடங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசித்தார்.

இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் 7 பேர் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் உறுப்பினர்கள் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து 10.11 மணிக்கு சட்டசபை கூட்டம் முடிந்தது. இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சபை தொடங்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சட்டசபையில் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.

சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். சட்டசபைக்கு அவர்கள் யாரும் வரவில்லை.

அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர். இந்த சூழலில் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது.

இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்து உள்ளதாகவும் சபாநாயகருக்கு பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும், சபாநாயகரிடம் ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாகவும், கட்சி சார்ந்து எதுவும் முடிவு எடுப்பதாக இருந்தால் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த 2 கடிதங்கள் மீது விருப்பு வெறுப்பின்றி நியாயமாக முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று சபாநாயகர் ஏற்கனவே கூறி இருந்தார்.

இதற்கிடையே சட்டசபை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கூட இரு தரப்பினரும் நினைவூட்டல் கடிதங்களை சபாநாயகரிடம் மீண்டும் கொடுத்தனர்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த கடிதங்கள் மீது சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியபோது எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது.

அதாவது முன்பு இருந்ததை போல் எடப்பாடி பழனிசாமியின் இருக்கையின் பக்கத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை இருந்தது. அந்த இருக்கை 2 பேர் அமரும் வகையில் உள்ள இருக்கை ஆகும்.

இந்த இருக்கையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல் வந்து அமர்ந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படாததால் தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டசபை கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தனர்.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் சட்டசபை கூட்டத்துக்கு வரவில்லை. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News