தமிழ்நாடு

மூளை காய்ச்சலால் பாதிப்பு: அரபு நாட்டில் தவித்த தமிழரை 24 மணி நேரத்தில் மீட்ட தமிழக அரசு

Published On 2023-08-25 06:52 GMT   |   Update On 2023-08-25 06:52 GMT
  • தமிழக தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அரசு எடுத்த முயற்சியால் அவர் பாதுகாப்பாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை:

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷபியுல்லா அப்துல் என்பவர் அரபு நாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவருக்கு அங்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கான வசதியும் இல்லை.

இதனால் அவரது பெற்றோர் வெளிநாடுவாழ் அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து சபியுல்லாவை காப்பாற்ற வேண்டும். அவருக்கு ஏற்பட்டுள்ள மூளை காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் அரபு நாட்டில் இருந்த சபியுல்லாவை தமிழகத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. மத்திய வெளியுறவுத் துறையுடன் பேசி அங்குள்ள தமிழக தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் முயற்சியால் சபியுல்லா நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனை டீன் தேரணிராஜன் அறிவுறுத்தலின் பேரில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சபியுல்லாவிற்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஷபியுல்லாவின் தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் வழியாக திரவ உணவு வழங்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் அரசு எடுத்த முயற்சியால் அவர் பாதுகாப்பாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News