தமிழ்நாடு

விக்கிரவாண்டி ஆசிரம வழக்கில் நேர்மையான விசாரணை- மாநில மகளிர் ஆணைய தலைவர் பேட்டி

Published On 2023-02-20 03:21 GMT   |   Update On 2023-02-20 03:21 GMT
  • கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் ஆசிரமத்தை நிர்வகித்து வந்துள்ளனர்.
  • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இதை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர்.

ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் மாயமானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கியதும், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, குரங்குகளை விட்டு கடிக்கவைப்பது, சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூபின்பேபி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

மேலும் இங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆஸ்பத்திரியில் 16 பெண்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் விசாரித்தபோது, 2 வடமாநில பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பல பெண்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதோடு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பலரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளார். கண்டிப்பாக நேர்மையான விசாரணை நடைபெறும்.

எங்களின் ஆய்வு, விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். ஆசிரமத்தில் காணாமல்போனவர்களின் பெயர் பட்டியல் இதுவரை கொடுக்கப்படவில்லை. விசாரணையின் முடிவுக்குள் பெயர் பட்டியல் பெற்று அரசிடம் ஒப்படைப்போம்.

மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அங்குள்ள குறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து சரி செய்வதற்கு உத்தரவிட்டுள்ளோம்.

இது போன்ற காப்பகங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இனிமேல் காப்பகங்களை அரசே ஏற்று நடத்த முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News