காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை
- காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது.
- பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களின் எந்தப் பகுதியிலும் கடந்த இரு மாதங்களில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. கடுமையான வறட்சி காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது. அதனால், உழவர்கள் அதிக குதிரைத்திறன் சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், கூட அவற்றின் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் எடுக்க முடிகிறது.
பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; உழவர்களை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.