தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பால்கனகராஜிடம் போலீசார் விசாரணை

Published On 2024-08-09 08:57 GMT   |   Update On 2024-08-09 08:57 GMT
  • இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
  • பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா. வக்கீல் ஹரிகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இது போன்று தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரபல வக்கீல் பால் கனகராஜிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.

பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பால் கனகராஜ் ரவுடிகள் சார்பிலும் ஆஜராகி வாதாடி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் ஆகியோர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் நாகேந்திரன் வேலூர் சிறையில் இருக்கும் நிலையில் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் பால்கனகராஜ் வக்கீலாக செயல்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று பால்கனகராஜ் இன்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News