அரசு வேலை, கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.14½ லட்சம் மோசடி செய்தவர் கைது
- ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
- மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.
இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.
இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.