உரிமைத் தொகையால் வங்கிகள் உஷார்- நிலுவை தொகையை பிடித்து கொள்கிறார்கள்
- கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.
- வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அதைவிட அதிகமாக வங்கிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
சிறு சிறு கடன்கள் வாங்கியது, நகை கடன்களுக்கு வட்டி கட்டாமல் இருப்பது, விவசாய கடன், கல்வி கடன், வாகன கடன் என்று பல வகையான கடன் பெற்றிருப்பார்கள். அவர்களில் பலர் கடன்களை திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள்.
கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.
இப்போது அந்த மாதிரி பட்டவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 வந்து விழுவதை அறிந்ததும் வங்கி மேலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
நிலுவை வைத்திருப்பவர்களின் கடன்களில் பிடித்தம் செய்யும்படி கூறி இருக்கிறார்கள். வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அதே போல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்த கணக்குகளிலும் பிடித்து கொள்கிறார்கள். இதனால் பலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏமாந்து போனார்கள்.
கடன் நிலுவை இருந்தால் கண்டிப்பாக அதில்தான் கழிப்போம் என்று வங்கி அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர்.