தமிழ்நாடு

'வீலிங்' சாகசம் செய்ய முயன்ற போது டிரான்ஸ்பார்மரில் பைக் மோதி அந்தரத்தில் தொங்கிய வாலிபர்

Published On 2022-06-06 10:04 GMT   |   Update On 2022-06-06 10:04 GMT
  • கட்டப்பனை அருகே சாகச பயணத்தின் போது டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
  • டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால் பினு ரூ.12 ஆயிரத்து 160 அபராதம் செலுத்த மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கூடலூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அடுத்த வெள்ளையாம்குடி பகுதியைச் சேர்ந்தவர் பினு(வயது 20). இவர் மற்றும் 3 வாலிபர்கள் வெள்ளையாம்குடியில் இருந்து கட்டப்பனை செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாகச பயணத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக சென்று மோட்டார் சைக்கிளை முன்புறம் மற்றும் பின்புறம் தூக்கி சாகசத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3 பேரும் முன்னால் சென்றனர். பினு மட்டும் பின்னால் வந்து கொண்டிருந்தார். வெள்ளையாம்குடி பகுதியில் சென்றபோது பினு சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதற்கிடையே ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிள் அந்தரத்தில் பறந்து சென்றது. அப்போது பினு பதற்றத்தில் அலறினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையோரம் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு அதன்மீது மோதி சொருகியது. இதில் பினு அந்தரத்தில் கீழே தொங்கிய நிலையில் திடீரென கீழே விழுந்து காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த கட்டப்பனை போலீசார் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த பினு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக வாகன கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரமணன் கூறினார். இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால் பினு ரூ.12 ஆயிரத்து 160 அபராதம் செலுத்த மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சாகச பயணத்தின் போது டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் வாலிபர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News