தமிழ்நாடு

பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- சேலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை

Published On 2023-03-16 06:18 GMT   |   Update On 2023-03-16 06:18 GMT
  • புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
  • வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம்:

சேலம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான போலீசார், கிச்சிபாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சையத் அலி வீடு மற்றும் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சேலம் கிளை தலைவர் காதர்உசேன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இன்று காலை தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News