தமிழ்நாடு

வேளச்சேரி விபத்து: பள்ளத்தில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

Published On 2023-12-08 08:59 GMT   |   Update On 2023-12-08 10:32 GMT
  • கிண்டி ரேஸ் கோர்சில் நடந்துவந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்தது.

சென்னை:

மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்புகளில் பெருமளவு பாதிக்கப்பட்ட சென்னை அதில் இருந்து மெல்ல மீளத் தொடங்கி இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர். திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில் 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், பள்ளத்தில் சிக்கியவர்களில் மேலும் ஒருவரின் சடலத்தை அதிகாரிகள் மீட்டனர். ராட்சத கிரேன் மூலம் இரும்புப் பெட்டியில் வைத்து அவரது உடல் மேலே கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News