தமிழ்நாடு

இன்று அமைச்சரவை கூட்டம்- உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி பழுக்குமா?

Published On 2024-08-13 01:57 GMT   |   Update On 2024-08-13 01:57 GMT
  • முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் இடம் பெறும்.
  • அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை:

தமிழகத்திற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். மீண்டும் அவர் அடுத்த மாதம் செப்டம்பர் 14-ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டு உள்ளது.

எனவே முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் இடம் பெறும். மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதியை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 5-ம் தேதி கொளத்தூரில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆய்வு நிகழ்ச்சியின்போது அவரிடம், 'விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கோரிக்கை வலுக்கிறது. ஆனால் பழுக்கவில்லை" என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அதுபோல் அமைச்சர் கீதா ஜீவனும், கூட்டம் ஒன்றில் பேசும்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் என்று அங்கீகரித்துப் பேசினார்.

எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடும் என்ற பலமான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்தும் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமா? கோரிக்கை பழுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்துள்ளது.

Tags:    

Similar News