தமிழ்நாடு

கைதான முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது தல்கா, முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன்.

கோவையில் கார் வெடிப்பு- கைதான 5 பேர் வீடுகளில் மீண்டும் சோதனை

Published On 2022-10-28 08:54 GMT   |   Update On 2022-10-28 08:54 GMT
  • கைதான 5 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
  • 6-வது நபராக கைதான அப்சர்கானை காவலில் எடுத்து விசாரிக்கலாமா என்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

கோவை:

கோவை கோட்டை மேட்டில் கார் சிலிண்டர் வெடித்ததில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் (வயது 29) என்பவர் பலியானார்.

தீபாவளி பண்டிகையின்போது மக்கள் கூட்டத்தில் காரை நிறுத்தி வெடிக்கச்செய்து கோவையில் பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் முபின் வீட்டில் மூட்டை மூட்டையாக வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

முபினுடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டவர்கள் யார் என்று விசாரித்தபோது முபின் வீட்டு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது. அந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் அனைவரையும் பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோவை கோர்ட்டில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, முபின் கூட்டாளிகள் 5 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரையும் போலீசார் நேற்றுமுன்தினம் காவலில் எடுத்தனர்.

கடந்த 2 நாட்களாக அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார், பண உதவி செய்தது யார், யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். 5 பேரும் தனித்தனி இடங்களில் விசாரிக்கப்பட்டதால் ஒருவர் கூறும் பதில்கள் மற்றவருக்கு தெரியாது. இதனால் 5 பேரும் வெவ்வேறு தகவல்களை கொடுத்துள்ளனர்.

இதில் ஒரே மாதிரியாக அவர்கள் அளித்த பதில்கள் மூலம் குண்டு வெடிப்பு சதிக்கான பல்வேறு முக்கிய ஆதாரங்களை போலீசார் வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

கைதான 5 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தி போலீசார் சில ஆதாரங்களை திரட்ட முடிவு செய்தனர். அதன்படி 5 பேரையும் உக்கடம் மற்றும் ஜி.எம். நகரில் உள்ள அவர்கள் வீட்டுக்கு தனித்தனி வாகனங்களில் நேரில் அழைத்துச் சென்றனர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

15 பேரை கொண்ட 5 தனிப்படை போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆதாரங்களை திரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் ரகசியமாக கூடி சதி திட்டம் தீட்டிய இடங்கள், வெடிபொருட்கள் பதுக்கிய இடங்கள் ஆகியவற்றையும் 5 பேரும் அடையாளம் காட்டி உள்ளனர். அந்த இடங்களுக்கு யார் எல்லாம் வந்து சென்றனர்? என்பது பற்றி தனிப்படை போலீசார் கேட்டு பதிவு செய்து கொண்டனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 5 பேர் வீடுகளிலும் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. தற்போது 2-வது முறையாக சோதனை நடத்தி உள்ளோம். அங்கு கைப்பற்றப்பட்ட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றனர்.

இந்த சோதனையையொட்டி உக்கடம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கைதான 5 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று மாலை 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அடுத்தகட்டமாக இந்த வழக்கில் 6-வது நபராக கைதான அப்சர்கானை காவலில் எடுத்து விசாரிக்கலாமா என்பது பற்றியும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கும்போது இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அவர்களிடம் அளிக்கவும் போலீசார் ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News