பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
- சவுக்கு சங்கரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.
- பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருச்சி:
போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.
இதனையடுத்து நீதிபதி ஜெயபிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தினார்.