தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை
- தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப்படுவது உண்டு.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும்.
இந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு-பகலாக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
பட்டாசுகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ஆய்வு செய்து உரிமம் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.
சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப்படுவது உண்டு. இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி தீவுத்திடல் மைதானத்தில் 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் ஒவ்வொன்றும் தலா 3 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பட்டாசு கடைகள் அருகே செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பட்டாசு கடைகளில் அக்டோபர் 11-ந் தேதி விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி வரை அங்கு பட்டாசு விற்பனை நடைபெறும்.
மொத்தம் 15 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும்.