தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்- உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

Published On 2024-02-05 05:34 GMT   |   Update On 2024-02-05 05:34 GMT
  • 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
  • ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார்.

இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தவிர மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார். தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் பற்றி கேட்டறிந்து வருவதால் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புகிறார்.

7-ந்தேதி காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்க முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News