தமிழ்நாடு

மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்.

கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பிடித்த பொதுமக்கள்- ரூ1லட்சம் அபராதம்

Published On 2024-03-16 06:09 GMT   |   Update On 2024-03-16 06:09 GMT
  • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
  • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழித்துறை:

கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News