தமிழ்நாடு

அமைச்சரவையில் மாற்றம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

Published On 2024-08-22 07:02 GMT   |   Update On 2024-08-22 08:35 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.

சென்னை:

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.

அதற்கு முன்னதாக அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்க உள்ளதாகவும் மூத்த அமைச்சர் உள்பட சிலரது பதவி பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

அதாவது மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுவதாகவும், 3 புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வந்தன. அதாவது நாளைய தினம் (23-ந் தேதி) நல்ல நாளாக இருப்பதால் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று பரபரப்பான தகவல் வந்த வண்ணம் இருந்தன.

இந்த தகவல் உண்மையா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் நேரடியாகவே, கேட்க முனைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான (மாநில அவசரகால செயல்பாட்டு மையம்) புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

கேள்வி: அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளிவருகிறதே?

பதில்: அதுபற்றி எனக்கு தகவல் வரவில்லை என்று தெரிவித்தார்.

இதன் மூலம் அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லை என தெரிய வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மேலும் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-

கே: பேரிடர் மேலாண்மை மையத்தில் என்னென்ன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது?

ப: எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன தேவைப்படுமோ அதையும் கொண்டு வருவோம்.

கே: கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் இதே போல் மையம் அமைக்கப்படுமா?

ப: படிப்படியாக கொண்டு வரலாம் என இருக்கிறோம்.

கே: கலைஞர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசின் விழாதான் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறி இருக்கிறாரே? ஆனால் நீங்கள் அதை மத்திய அரசின் விழா என சொல்லி இருக்கிறீர்கள்?

ப: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.

கே: உங்கள் அமெரிக்க பயணத்தில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கும்? அங்குள்ள தமிழ் தொழில் அதிபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

ப: அமெரிக்காவில் முதலீட்டாளர்களோடு சந்திப்பு உள்ளது. எல்லோரையும் பார்க்கிறோம். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகு அதன் முடிவுகளை அப்போது கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News