தி.மு.க. இளைஞர் அணிக்கு 44 வயது- உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் வாழ்த்து
- கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும்.
- இந்தியாவைக் காக்கும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவைக் காக்கும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.