மாணவர்களுடன் அமர்ந்து ஆங்கில பாடத்தை கவனித்த கலெக்டர்
- அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார்.
- சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி, பூண்டி, அமையாகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள்,ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலர்களில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார். அப்போது அப்பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் பிரசாந்த் கவனித்தார். மேலும் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் சின்னசேலம் பேரூராட்சி மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.
சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியிடம் மாலை கிராம மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.