ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- 2 ரவுடிகள் கைது
- பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.
பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.
இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.