தமிழ்நாடு

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்

போலீஸ் அக்கா திட்டத்துக்கு கல்லூரி மாணவிகள் வரவேற்பு

Published On 2024-03-06 04:56 GMT   |   Update On 2024-03-06 04:56 GMT
  • ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
  • பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கோவை:

கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநகர போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கல்லூரிக்கு ஒரு பெண் போலீஸ் வீதம் 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

போலீஸ் அக்கா திட்டத்துக்கான போலீசார் அடிக்கடி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவிகளுடன் கலந்துரையாடி பொது இடங்களில் வாலிபர்கள் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி தங்களின் செல்போன் நம்பரை கொடுத்து தைரியப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற கல்லூரி மாணவிகள் போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பதால் போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பவ இடங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய முடிகிறது.

கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா திட்டம் மட்டுமின்றி மாநகரில் இயங்கி வரும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் பெற்றோரை போலீசார் நேரடியாக சந்தித்து பேசி, அந்த பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க செய்து வருகின்றனர்.

கோவை மாநகரில் அமலில் இருக்கும் போலீஸ் அக்கா மற்றும் ஆபரேஷன் ரீபூட் ஆகிய திட்டங்கள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளை நட்புரீதியில் தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகள் தெரிவித்து உள்ள கருத்துக்களின்படி அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக போலீசார் புறப்பட்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட பணிகள் நடைபெறுகிறது.

பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வது ஆகிய 3 கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நடைமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன.

பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் போலீசார் நேரடியாக சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News