இடுக்கியில் இன்று முழு அடைப்பு: தேனி மாவட்ட எல்லையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்
- பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை.
- கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கியில் ஆளும் கம்யூனிஸ்ட்டு அரசை எதிர்த்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கிய பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களில் மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதனையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. இதேபோல்தற்போது சபரிமலையில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை. மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், பாளையம், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதேபோல் கேரளாவுக்கு வந்த சுற்றுலா மற்றும் பிற வாகனங்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி விடப்பட்டன. இரு மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எல்லைப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.