மாவட்ட செயலாளர்களுடன் விரைவில் மீண்டும் ஆலோசனை: அ.தி.மு.க.வின் அழைப்புக்காக காத்திருக்கும் பிரேமலதா
- அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
- பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சி களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தே.மு.தி. க.வும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த பிரேமலதா, 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று மீண்டும் கருத்து தெரிவித்த பிரேமலதா கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்மூலம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா தயாராக இருப்பதாகவே கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவை பிரேமலதா விரைவில் அமைக்க உள்ளார். இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசனை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் தொகுதி பங்கீட்டு குழு ஆகியோருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். இதன் பிறகே அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு, அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்த உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்த செல்லும்போது தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.விடம் வழங்க உள்ளனர். இதனை பரிசீலித்த அ.தி.மு.க. உரிய தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.