பெரியகுளம் நகராட்சியில் வெளிநடப்பு செய்த ஆணையாளரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
- ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமிதாசிவக்குமார் உள்ளார். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டதால் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எப்போதும் வறட்சியே ஏற்படாத பெரியகுளம் நகரில் வேண்டுமென்றே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஆணையாளரின் செயல்பாடே காரணம் என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்து உறுப்பினர்களும் சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் ஆணையாளர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கோசமிட்டபடி இருந்தனர்.
ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணையாளருடன் சுகாதார ஆய்வாளர், மேலாளர் ஆகியோரும் மன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் ஆணையாளர் உரிய விளக்கம் அளிக்கும் வரை உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி அரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் சுமிதா ஆணையாளருடன் பேசி மன்றத்திற்கு வந்து விளக்கம் அளித்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து வராததால் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.