வாடிவாசல் தடுப்பு கட்டையில் மோதிய விஜயபாஸ்கர் காளை மரணம்- பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி
- கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
- இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.
விராலிமலை:
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.
இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.
கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.