டெங்கு காய்ச்சல் பரவுதல்: தலைமை செயலாளர் தலைமையில் இன்று மாலை அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம்
- ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு வேகமாக பரவுவதால் கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
- சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற சனிக்கிழமை உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்
சென்னை:
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் கடந்த வாரம் ரக்ஷன் (வயது4) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டான்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஒவ்வொரு பகுதியிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு வேகமாக பரவுவதால் கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீர் மூலம் இந்த கொசு உற்பத்தியாவதால் இதை ஒழிக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு கொசுக்களை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற சனிக்கிழமை உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
ஓமந்தூர் பன்நோக்கு மருத்துவமனை அரங்கில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மருத்துவ கல்லூரி டீன்கள், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.