தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-10-13 08:22 GMT   |   Update On 2024-10-13 08:57 GMT
  • பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னையில் நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு சென்றார்.

அங்குள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் மழைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

மழை தீவிரம் அடையும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மழைக்காக மாநகராட்சி செய்துள்ள முன்னேற்பாடுகளை உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கி கூறினார்கள்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தோம்.

வானிலை எச்சரிக்கை அடிப்படையில், அமைத்து வருகின்ற சில நாட்களில் தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 20 செ.மீட்டருக்கு மேல் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது.


பொதுமக்களின் உயிரும் உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் முதல் நோக்கமாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து பணிகளையும், மேற்கொண்டு வருகிறோம்.

மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பிரத்யேக உதவி எண்ணாக 1913 என்ற நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 பேர் 4 ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் பொது மக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தொலைபேசி மூலம் வழங்குகிறார்கள். அவசர உதவி தவிர மீடியா, வாட்ஸ்அப், நம்ம சென்னை தளம் ஆகியவற்றிலும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரம் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையிலான 100 எச்.பி. பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கக் கூடிய இடங்களில் 31 ரெயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட விஷயங்களை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி உறுதி செய்வார்கள்.

இது மட்டுமின்றி அரசு சார்பாக தமிழ்நாடு அலெர்ட் என்ற புதிய செயலி உருவாக்கி உள்ளோம். அதனை டவுன்லோடு செய்து பொதுமக்கள் மழை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு வானிலை மாதிரிகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். தற்போது ஓரிரு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால், அவற்றை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

பொதுமக்கள் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் வந்தால் அதனை உடனே மாநகராட்சிக்கு சோஷியல் மீடியா, சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


ரோட்டில் கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மின்சார வாரியத்துக்கு தெரிவித்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ வாட்டர் 356 பம்பிங் ஸ்டேஷனும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், உள்ளிட்ட 673 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News