ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்
- காயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து குறித்து தகவலுக்கு 044-25330952, 044-25330953, 044-24354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.