பழனியில் சாமி தரிசனத்திற்கு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- செல்போனுக்கு இன்று முதல் தடை
- மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
- பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மலைக்கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த கல்வியாண்டில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், இளைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் சிலர் மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வந்தது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும் இன்று முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளது. மேலும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்புபயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதவிநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை என்பதால் அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.