தமிழ்நாடு

ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகிக்க தி.மு.க.-காங்கிரஸ் திட்டம்: அண்ணாமலை

Published On 2024-04-13 10:30 GMT   |   Update On 2024-04-13 10:30 GMT
  • பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
  • எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.

தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.


மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.

தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.

தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News