தமிழ்நாடு

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: மின்தடையால் பரிதவித்த எம்.எல்.ஏ-வால் பரபரப்பு

Published On 2023-05-25 06:40 GMT   |   Update On 2023-05-25 06:40 GMT
  • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News