வாழ்க உதயநிதி என கோஷமிட்டு மக்களவையில் பதவியேற்ற திமுக எம்.பிக்கள்
- பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
- வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.
தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.
அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.
மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.
கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.
கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.