தமிழ்நாடு

தி.மு.க. அரசு வெறும் "வாய் அரசியல்" செய்கிறது- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2024-10-21 12:35 GMT   |   Update On 2024-10-21 12:35 GMT
  • பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
  • அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒருநாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இது வெறும் டிரெய்லர் மட்டும் தான். டிசம்பர் மாத காலங்களில் பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகுது என தெரியவில்லை.

ஒரு நாள் மழைக்கே தமிழக அரசின் சாதனையென்று சொல்லி கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெருமழைக்கு தயாராக வேண்டும்.

ஒரு நாள் பெய்த மழைக்கு படகுகள் மற்றும் தீபாவளிக்காக பஸ்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதுவரைக்கும் பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் தூர்தர்ஷன் ஊழியர்கள் பாடியது தவறு. அவர்கள் தவறு செய்துவிட்டனர் என மன்னிப்பு கேட்டு விட்டனர். இதற்கும் கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் தி.மு.க. அரசு அரசியல் செய்து வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் நிலவிக் கொண்டுள்ளது.

மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. விவசாயம் இல்லை. நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் இதுவரைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. இந்த அரசு வெறும் வாய் அரசியல் செய்து கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News