தமிழ்நாடு

தி.மு.க. பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது: மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

Published On 2023-10-05 09:53 GMT   |   Update On 2023-10-05 09:53 GMT
  • தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் தி.மு.க. சார்பில் பணியாற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • வடமாவட்டங்களுக்கான பயிற்சி பாசறை திருவண்ணாமலையில் 22-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் தி.மு.க.வில் இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் தி.மு.க. சார்பில் பணியாற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலை தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சரிபார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மண்டல அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 26-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியிலும், ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி தென் மண்டலத்துக்கான கூட்டம் ராமநாதபுரத்திலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி (செப்டம்பர்) மேற்கு மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறை படியூர் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் வியூகம் குறித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து வடமாவட்டங்களுக்கான பயிற்சி பாசறை திருவண்ணாமலையில் 22-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

இந்த கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

Tags:    

Similar News